கள்ளச்சாராய கடத்தல் பேர்வழிகளுக்கு நூதன நிபந்தனை பிணை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில சாராய கடத்தலில் ஈடுபட்டவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி நூதன உத்தரவுடன் பிணை வழங்கினார்.

Update: 2024-06-27 08:41 GMT

நீதிமன்றம் (பைல் படம்)

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலை அடுத்த காளகஸ்திநாதபுரத்தில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னைஅபிராமி, உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீஸார் ஜூன் 5-ஆம் தேதி மேற்கொண்ட வாகன சோதனையில், காரைக்காலில் இருந்து 900 லிட்டர் பாண்டி சாராயத்தை காரில் கடத்தி வந்த ஆயப்பாடியை சேர்ந்த சுமன், திருக்களாச்சேரியை சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, இதில் தொடர்புடைய செல்வம் என்பரையும் கைது செய்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு 20 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பிணை கோரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால் வெளியில் சென்று மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவார்கள் எனக்கூறி அவர்களது பிணைக்கு, முதன்மை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராம.சேயோன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், அம்மூவரும் பட்டமங்கலத்தெருவில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.6,500 மதிப்பிலான 2 சானிடரி நாப்கின் எரியூட்டும் இயந்திரங்களை வாங்கித்தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News