திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் நேற்று முன் தினம் இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இடி மின்னல் சூறாவளி காற்றுடன் சுமார் 2 மணி நேரத்தில் 56 மில்லி மீட்டர் அளவு பதிவானது. இதனால் வத்தலகுண்டு சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் இருந்து வரும் முனியாண்டி கோவில் ஓடையில் திடீரென காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடையின் கரையில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அதேவேளையில் ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரங்களில் இருந்த 15 ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. மஞ்சள் ஆற்று படித்துறை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ள நீர், அங்கிருந்த 5 இரு சக்கர வாகனங்களையும் இழுத்துச் சென்றது. தகவலறிந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் வெள்ளத்தில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 இருசக்கர வாகனங்களும் மஞ்சள் ஆற்றில் இருந்து இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டன. மதுரை சாலையில் உள்ள கன்னிமார் கோவில் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுப்பிரமணியசாமி கோவில் பகுதி குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.