சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் காசி தீர்த்தம் வைத்து பூஜை!!

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் காசி தீர்த்தம்  வைத்து பூஜை செய்யப்படுகிறது.

Update: 2024-12-09 13:25 GMT

Sivanmalai 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை  கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு  மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இரும்பு சங்கிலி, ருத்ராட்சம் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இளநீர் வைத்தபோது தேங்காய், தேங்காய் பருப்பு விலை கூடியது குறிப்பிடத்தக்கதாகும். இது போல இங்கு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.  கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி முதல் கரூர் மாவட்டம்  சின்னாண்ட கோயில் பகுதியைச் சேர்ந்த தணிகைநாதன்(33)  என்ற பக்தரின் கனவில் மண் விளக்கு வைக்க உத்தரவானது. மண் விளக்கு வைத்து பூஜை செய்த போது கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவை தான் சிவன்மலை ஆண்டவர் உணர்த்தி உள்ளார் என பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.  அதன் பின்னர் இன்று உடுமலை பகுதியை சேர்ந்த சேர்மராஜா என்பவரின் கனவில் ஆண்டவர் காசி தீர்த்தம் வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் காசி தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது பற்றி கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு  பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். காசி தீர்த்தம் வைத்துள்ளதால் ஆன்மீகம் வளரும், சுபகாரியங்கள் தங்குதடையின்றி நடைபெறும் எனவும் இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News

மேடை தயார்