Update: 2025-01-07 04:08 GMT
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றையொட்டியுள்ள பிடாகம், குச்சிப்பாளையம், நத்தமேடு உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில், 250 ஏக்கர் அளவில் விவசாயிகள் பன்னீர்கரும்பு சாகுபடி செய்து, தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது.இந்தாண்டும், அரசு தரப்பில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க, பன்னீர்கரும்பு கொள்முதல் செய்யும்பணி கடந்த இரண்டு நாட்களாக தொடங்கி நடந்து வருகிறது.இந்த நிலையில், பாரபட்சமாகவும், மூன்றில் ஒரு பங்கு கரும்பை மட்டுமே கொள்முதல் செய்வதாகவும் கூறி, பிடாகம், குச்சிப்பாளையம் பகுதி விவசாயிகள் நேற்று காலை 10.00 மணிக்கு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிடாகம் அருகே, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., திருமால், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று, விவசாயிகள் 10.20 மணிக்கு கலைந்து சென்றனர். மறியலால், தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விழுப்புரம் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் விஜயசக்தி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேசினர். அப்போது, எவ்வித தலையீடும், பாரபட்சமும் இல்லாமல் முழு அளவில் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, கரும்பு கொள்முதல் பணி தொடங்கியது.

Similar News