விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், முதல்கட்டமாக பாலத்தின் தெற்கு பகுதி சாலையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வாகன போக்குவரத்து துவங்கியது. மேம்பாலத்தின் வடக்கு பகுதி சாலை பணிகள் கடந்த டிச. 25ம் தேதி நிறைவடைந்து. வாகன போக்குவரத்து துவங்கும் முன்பே அச்சாலையில் விரிசல் ஏற்பட்டது.அதையடுத்து விரிசல் ஏற்பட்ட இடத்தில், கடந்த 28ம் தேதி ராட்சத பொக்லைன் மூலம் 1 மீட்டர் அகலம், 50 மீட்டர் நீளம், 1 அடி ஆழத்திற்கு சாலையை தோண்டி சீரமைக்கும் பணி துவங்கியது. இந்த பணிகள் கடந்த கடந்த 3ம் தேதி முடிந்தது.வாகன போக்குவரத்து துவங்க தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகளின் அனுமதி பெறவேண்டியுள்ளது.இந்நிலையில் பாலத்தின் வடக்கு பகுதி சாலையில் தற்காலிகமாக வாகன போக்குவரத்து துவங்கியது.தென்னக ரயில்வே அதிகாரிகள் அனுமதி பெற்ற பின்னர், மேம்பாலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதி சாலை வழியே தடையின்றி 100 சதவீதம் வாகன போக்குவரத்து தொடரும் என 'நகாய்' அதிகாரிகள் தெரிவித்தனர்.