விழுப்புரம் நகர பகுதிகளில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது.இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய, எஸ்.பி., சரவணன் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வ விநாயகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் நேற்று விழுப்புரம் ஜானகிபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியே பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.அவர்கள், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த மணி(எ)பாலகிருஷ்ணன்,38; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(எ)சாமுவேல்,40; ஆகியோர் என்பது தெரிய வந்தது.இவர்கள், விழுப்புரம் நகர பகுதிகளில் 6 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 35 சவரன் நகைகள், ரூ.1,90,000 பணம் மற்றும் ஒரு பைக், இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர்.இருவரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.