விவசாயிகள் போராட்டம் காரணமாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
வெறிநாய்கள் கடித்து ஆடுகள் செத்துப்போனது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளதால் முத்தூரில் உள்ள அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;
காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம், மூலனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு வருட காலமாக இரவு நேரங்களில் தெரு நாய்கள் மற்றும் வெறிநாய்கள் ஆட்டுப்பட்டிகளில் புகுந்து ஆடுகளை கடித்து குதறி வருவதால் ஏராளமான ஆடுகள், மாடுகள் உயிரிழந்து வருகின்றன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள பாரவலசு கிராம பகுதியில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் செத்தன. செத்துப்போன ஆடுகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். வெறி நாய்களால் ஆடுகள் உயிரிழப்பு தொடர்கதையாகி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இறந்த ஆடுகள் அனைத்திற்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து பல்வேறு விவசாய சங்க அமைப்புகள் முத்தூரில் உள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இதன் காரணமாக முத்தூரில் உள்ள அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசார் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கிரிஸ் யாதவ் அசோக் உத்தரவின்படி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் ஏராளமான ஆயுதப்படை போலீசார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வீட்டில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மேலும் முத்தூர் கடைவீதி, வெள்ளகோவில் சாலை, காங்கேயம் சாலை, நத்தக்காடையூர் சாலை, வேலம்பாளையம் சாலை, ஈரோடு சாலை, கொடுமுடி சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வீட்டு முன்பு திடீரென போலீசார் குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.