ஆலோசனை

பட்ஜெட்டுக்கு முன் தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்திட முதலமைச்சருக்கு வேண்டுகோள் அனைத்து தொழில் வணிக சங்க செயற்குழு தீர்மானம்;

Update: 2025-02-20 15:56 GMT
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 13வது செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் தொழில் வளர்ச்சி குழு தலைவர் எம்.ஆர்.வெங்கடாசலம் வரவேற்றார். ஸ்டீல் பேப்ரிக்கேஷன் உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் முருகானந்தம் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.சந்திரகுமாரின் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழ் நாடு அரசு பட்ஜெட் கூட்டத்துக்கு முன்னர் தமிழ் நாட்டில் உள்ள தொழில் வணிக சங்கங்களில் முக்கியமானவற்றை அழைத்து பட்ஜெட் குறித்து கலந்தாலோசனை நடத்திட வேண்டும். தமிழ் நாட்டின் 33வது மா நகராட்சியான ஈரோட்டுக்கு, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களை விட அதிகப்படியான வரிவிதிப்பு செய்யப்பட்டிருப்பது தொழில் துறையினரை நசுக்கும் செயலாக உள்ளது.எனவே, வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கனி மார்கெட் வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். கேண்டீன் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை குறிப்பிட்டவாறு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், தொழில் வணிக சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Similar News