திருட்டு

கொடுமுடி அருகே துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் - ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை மர்ம நபர் கைவரிசை;

Update: 2025-02-28 15:12 GMT
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாமரை பாளையம் லட்சுமி புறத்தில் வசித்து வருபவர் லட்சுமி (58). இவரது கணவர் பழனிச்சாமி கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். லட்சுமிக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மாலை லட்சுமி அவரது தாய் வெள்ளையம்மாளின் ஊரான திருச்சி மாவட்டம் தும்பலத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.இந்நிலையில் இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம், பூஜை அறையில் இருந்த ரூ 50 ஆயிரம், 22 பவுன் நகை ஆகியவை திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News