நாம் அனைவரும் இணைந்து காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.;

Update: 2025-03-25 16:37 GMT
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இன்று காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசியதாவது: தேசிய அளவில் மிக முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக காசநோய் விளங்குகிறது. ஒருங்கிணைந்த மற்றும் விரிவான அணுகு முறையின் மூலம் காசநோயை கண்டுபிடித்து சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பு பணிகளை வலிமைப்படுத்துவதற்காக தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நவீன யுத்திகளும் புகுத்தப்பட்டு வருகின்றது. 2025ம் ஆண்டின் கருப் பொருளாக ஆம்! நம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்!: என்பதாகும். அதே போல் காசநோய்க்கு எதிராக உறுதியுடன் முன் வருவோம் காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வோம்!! காசநோயளிக்கான சேவையை வழங்குவோம்!!! என்ற கருப் பொருளானது கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றியை தந்துள்ளது. இதன் மூலம் காசநோயை ஒழிப்பதற்கான நம்பிக்கை, அவசரம் மற்றும் பொறுப்புகளும் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) கீழ் 2024 ஆம் ஆண்டில் சுமார் 58,861 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு, சுமார் 1971 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 87% பேர் வெற்றிகரமாக குணமடைந்துள்ளனர். மேலும் விரைவாக காசநோயைக் கண்டறிய தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி தலைமை மருத்துவமனை, மாவட்ட காசநோய் மையம், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டிணம், திருச்செந்தூர், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுக்கோட்டை, கீழஈரால் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாட் ஆய்வகங்கள் அமைந்துள்ளன. இந்த ஆய்வகங்கள் மூலம் பயனாளர்கள் ஒரே நாளில் தங்களுக்கு, காசநோய் உள்ளதா, இல்லையா என்பதனை அறிந்து கொள்ளலாம். எச்.ஐ.வி மற்றும் காசநோய் ஆகியவை மோசமான இணைத்தொற்றாக இருப்பதால், நோயின் வீரியம் மற்றும் இறப்பைக் குறைக்க இரண்டுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சையளிப்பது அவசியமாகிறது. எச்ஐவி மற்றும் காசநோய் உள்ள 37 நோயாளிகளுக்கு தற்போது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எச்ஐவி/எய்ட்ஸ் (PLWHA) உள்ளவர்களுக்கு முழுமையான சேவையை ART மையம் வழங்கி வருகிறது. காசநோய் என்பது அரசுக்கு தெரிவிக்கப்படக்கூடிய நோயாகும். அனைத்து தனியார் மற்றும் பெருமருத்துவமனைகள், மருந்தகங்கள் தாங்கள் கண்டறிந்த காசநோயாளி விபரங்களை மாவட்ட காசநோய் மையத்திற்கு தெரிவிக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. காசநோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க நமது அரசானது, தமிழ்நாடு காசநோய் இறப்பில்லா திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைத் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள காசநோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அதிக முன்னுரிமையுடன் உள்நோயாளிக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடனிருப்போரை காசநோய் நோயிலிருந்து தடுப்பதற்காக காசநோய் தடுப்பு சிகிச்சையும் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், காசநோயால் பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஆதரிப்பதற்காக, அவர்களின் சிகிச்சைக் காலத்தில் தற்காலிக இயலாமைக்கான ரூ 1000/- வழங்கப்படுகிறது. காசநோயை விரைந்து ஒழிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையின்படி, நமது முதலமைச்சர் , நமது மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை வழங்கியுள்ளார். இவ்வாகனம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எக்ஸ்ரே வசதிகள் இல்லாத பகுதிகளில் காசநோய் கண்டறியும் பணியை செய்து வருகிறது. பொதுமக்களை பொறுத்தவரையில், அனைவரும், இருமல் மற்றும் தும்மலின் போது வாயைத் துணியால் மூடிக்கொள்ள வேண்டும். சாலை மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. அருகில் உள்ளவர்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து இருமல், காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு மற்றும் சளியில் இரத்தம் வருதல் போன்ற காசநோய் அறிகுறிகள் இருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை நாடி இலவசமாக காசநோய் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இணைந்து காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். இச்சிகழ்ச்சியில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) பிரியதர்ஷினி, துணை இயக்குநர்கள் பொன்ரவி (குடும்ப நலம்), சுந்தரலிங்கம் (காசநோய்), யமுனா (தொழு நோய்) உட்பட அரசு அலுவலர்கள்,மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News