அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பள்ளி சாலையில் செயல்பட்டு வரும் அமுதா அங்காடி என்ற பல்பொருள் அங்காடி முன்பு கடையை திறக்க விடாமல் லாரியில் கொண்டு வந்து முண்டு கற்களை கொட்டி மர்ம நபர்கள் அராஜகம்; சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளி சாலையில் அமுதா அங்காடி என்ற பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. தனியார் உறவின் முறை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பல் பொருள் அங்காடியை விக்னேஷ் கண்ணா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த பல்பொருள் அங்காடி முன்பு கடையை திறக்க விடாமல் சில மர்ம நபர்கள் இரவு நேரத்தில் லாரியில் கொண்டு வந்து முண்டு கற்களை கொட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையை திறக்க கூடாது என்ற நோக்கத்தில் கடை முன்பு இருக்கும் பொருட்கள் மீதும் பெட்டியின் மீதும் கடை சட்டர் வரை லாரியோடு முண்டு கற்களை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் விக்னேஷ் கண்ணா செய்வதறியாது நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார் ஆனால் அங்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அருப்புக்கோட்டை ஏ எஸ் பி அலுவலகத்தில் ஏ எஸ் பி மதிவாணனை சந்தித்து புகார் அளித்துள்ளார். கற்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக ஏஎஸ்பி உறுதி அளித்ததாக விக்னேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். லாரியில் வந்து முண்டு கற்களை கொட்டிய வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில், கடையை திறக்க விடாமல் நேற்று இரவு கற்களை கொட்டி வைத்துள்ளார்கள். நேற்று இரவு நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றோம். ஆனால் இரவு நேரத்தில் புகார் வாங்க மாட்டோம் என தெரிவித்து விட்டார்கள் அதனால் காலையில் சென்றோம் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஏஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளோம். புதிய நிர்வாகம் முதலில் இருந்து எங்களுக்கு அடிக்கடி பிரச்சினை வருகிறது. இதேபோல் இரண்டாவது முறையாக இங்கு கற்களை கொட்டி கடையை திறக்க விடாமல் செய்கின்றனர். புதிய நிர்வாகிகள் 4.5 லட்சம் வழங்கினால் தான் கடையை திறக்க விடுவோம் என கூறுகிறார்கள். ஏற்கனவே பழைய நிர்வாகத்திற்கு பணம் கொடுத்து தான் கடையை நடத்தி வருகிறோம். இந்த கற்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.