நீலகிரி - ஆன்லைனில் ஏமாந்த அரசு ஊழியர்!

நீலகிரியில் அரசு ஊழியரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 11 லட்சம் ஏமாற்றியவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-27 00:44 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 34 வயதுள்ள அரசு ஊழியருக்கு முகநூல் மூலம் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நிதி முதலீடு செய்வது தொடர்பாக செல்போன் செயலி மூலம் இணைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அந்த நபர் இணைப்பை பயன்படுத்தி மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் குறிப்பிட்ட பணத்தை முதலீடு செய்து சோதனை செய்துள்ளார். அப்போது அதற்கு கூடுதலாக பணம் வந்துள்ளது. இதனால் நம்பிக்கை ஏற்பட்டதும் மகிழ்ச்சியடைந்த அவர், 10 தவணைகளில் மொத்தம் ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்தை வங்கி கணக்கில் இருந்து முதலீடு செய்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் எதிர்பார்த்தது போல் பணம் திரும்ப கிடைக்கவில்லை.

இதனால் பணத்தை தருமாறு அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரசு ஊழியர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோசடியாக ஏமாற்றிய பணத்தை வங்கி கணக்கில் முடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆன்லைன் முதலீடு என கூறி அரசு ஊழியரிடமே ரூ.11.25 லட்சம் மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News