நீலகிரி : வாலிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி - போலீஸார் விசாரணை!
இரட்டிப்பு வருமானம் தருவதாக வாலிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 30 வயது பொறியாளருக்கு வாட்சப் செயலி மூலம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பிட்காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய வாலிபர் முதலில் ரூ.5000 முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு ரூ.10 ஆயிரம் திரும்ப கிடைத்தது. முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சியில், லட்சக்கணக்கில் இவருடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இரண்டாவது முறை முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்பு தொகை வரவில்லை. மொத்தமாக ரூ. 16 லட்சம் முதலீடு செய்து இருந்தார். அது குறித்து அவர் முதலீடு செய்த இடத்தில் விசாரித்ததில், ஜி.எஸ்.டி., உள்பட பல்வேறு காரணங்களை தாமதமாக்கிக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் முதலீடு செய்த பணத்தையாவது மீட்க முயற்சி செய்ததும் முடியவில்லை.
இது குறித்து ஊட்டி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாறிய வங்கிக் கணக்கை அடையாளம் கண்டு, பணத்தை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்