துப்பாக்கிச்சூட்டால் காட்டெருமை பலி - குற்றவாளிகளுக்கு வனத்துறை வலை..!
உதகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து காட்டெருமை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-19 13:24 GMT
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கும், விவசாய நிலங்களுக்கும் உலா வரும் காட்டெருமைகளால் அவ்வப்போது மனித-விலங்கு மோதலும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதகை அருகே உள்ள காட்டேரி அணைப்பகுதிகள் 4 - வயது மதிக்கதக்க ஆண் காட்டெருமை ஒன்று இரத்த காயங்களோடு இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற குந்தா வனசரக வனத்துறையினர், இறந்த காட்டெருமை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள இடத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், தொடர்ந்து சோதனை செய்தபோது காட்டெருமையின் நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, காட்டெருமையை சுட்டுக்கொன்றவர்களைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டு காட்டெருமை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.