சிறு பட்டாசு ஆலைகளை குறிவைக்கும் அதிகாரிகள்

சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து நடத்தும் ஆய்வை கண்டித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Update: 2024-05-24 16:52 GMT
சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து நடத்தும் ஆய்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்- அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பேட்டி

 விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் படி உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவக்கியுள்ளனர். இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 150 பட்டாசு ஆலைகளை மூடப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைஇல்லாமல் தனது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த சிறு பட்டாசு ஆலைகள் மூலம் ஆண்டிற்கு சுமார் 800 முதல் 1000 கோடி வரை உற்பத்தி நடைபெறுகிறது. சமீப காலமாக தொடர் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் வெடி விபத்துகளை தவிர்ப்பதற்காக வருவாய்த் துறை மூலம் குழு அமைக்கப்பட்ட ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பெரிய ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் சிறுவர்கள் வெடித்து மகிழும் சிறிய ரக பட்டாசு தயாரிக்கும் ஆலைகளை குறிவைத்து ஒருதலைபட்சமாக ஆய்வு நடத்தி வருவதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெரிய அளவிலான நாக்பூர் உரிமம் பெற்று இயங்கும் ஆலைகளில் பெரிய விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் விபத்துகளை ஏற்படுத்தும் ஆலைகளில் ஆய்வு நடத்தாமல் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து ஆய்வுகள் நடத்துவதை கண்டித்து ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய்த்துறையினர் கடந்த சில மாதங்களில் மட்டும் மேற்கொண்ட ஆய்வில் விதிமீறியதாக 25 ஆலைகளை மூடி சீல் வைத்துள்ளனர். இதுகுறித்து பேட்டியளித்த தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் மணிகண்டன், கடந்த 5 மாதங்களில் மட்டும் ஏற்பட்ட 10 பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்துக்கள் முழுவதும் நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பெரிய பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெற்ற விபத்துக்கள் ஆகும். தொடர் விபத்துக்களை ஏற்படுத்தும் பெரிய பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் சிறிய பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்கிற பெயரில் சிறிய பட்டாசு தொழிற்சாலைகளை நலிவுடைய செய்யும் நோக்கில் வருவாய் துறையினர் செயல்பட்டு வருகின்றனர் எனவும் பாரபட்சமாக நடத்தப்படும் ஆய்வினை நிறுத்தாவிட்டால் சிறு பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து அடுத்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News