மணலியில் ரூ.2.64 கோடியில் சாலை பணி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்!!
மணலியில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் சாலை பணி மேற்கொள்ள, சாலையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓரிரு நாளில் நோட்டீஸ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணலி மண்டலம், 21வது வார்டு பாடசாலை தெருவில் ₹2.64 கோடி செலவில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக திருவொற்றியூர் தாசில்தார் சவுந்தர்ராஜன் தலைமையில் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்தனர். இந்நிலையில் பாடசாலை தெருவில் நடைபெறும் சாலை பணி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் கட்டா ரவிதேஜா, மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன், கவுன்சிலர் முல்லை ராஜேஷ்சேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளின் தரம் மற்றும் சாலையின் அளவீடு ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதில் ஒரு மாதத்திற்குள் சாலைப் பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என வடக்கு மண்டல துணை ஆணையர் கட்டா ரவிதேஜா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பாடசாலை தெருவில் தரமான கான்கிரீட் சாலை அமைக்கும் பணி முழு பேச்சில் நடைபெறுகிறது. சாலையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓரிரு தினங்களில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு விரைவில் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் தாங்காகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டால் சிரமங்களை தவிர்க்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.