மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை !
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நள்ளிரவில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-13 05:03 GMT

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் மாசி கொடை விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவு பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சரியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சாஸ்தா கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் ஒன்பது மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. மேலும் இரண்டு குடம் தேனும் எடுத்துவரப்பட்டது. அவற்றை தலையில் சுமந்தவாறு வந்த பூசாரிகள் வாயில் சிவப்பு துணி கட்டி இருந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராகப் போர்த்தப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஒடுக்கு பவனி வரும்போது கோயிலை சுற்றி திரளாக பக்தர்கள் கூடி இருந்தனர். கோவிலை ஒருமுறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டது. அதே சமயம் குருதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து ஒடுக்கு பூஜை அலங்கார தீபாராதனையுடன் கோயில் கொடிமரத்தில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுற்றது.