வேட்பாளரின் வாகனத்தை சோதனையிடாத அதிகாரிகள்
சிங்கம்புணரி அருகே சோதனைச்சாவடியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வாகனத்தை அதிகாரிகள் சோதனையிடாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். வேட்டையன்பட்டியில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் வாகனம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வாகனமும் காவல் நிலையம் முன் உள்ள சோதனைச்சாவடியை கடந்து சென்றது.
அவர்களது வாகனத்திற்கு முன் சென்ற சாமானியர்களின் வாகனத்தை சோதனையிட்ட மத்திய துணை இராணுவத்தினர், கார்த்தி சிதம்பரத்தின் காரை கண்டு கொள்ளாமல் ஒதுங்கி நின்றனர். பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த கார்த்தி சிதம்பரம் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் டீ குடித்து விட்டு அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு எஸ்.புதூருக்கு புறப்பட்டு சென்றார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு சாமனியர் முதல் வேட்பாளர்கள், அமைச்சர்கள் வரை அனைவரும் கட்டுப்பட்டவர்கள்தான் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால், சிங்கம்புணரி பகுதியில் இன்று நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.