வீடுகளை இடிக்க அதிரடி படையுடன் குவிந்த அதிகாரிகள்!
வேலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சி 59 வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் அரசு இடத்தில் சுமார் 45 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களை காலி செய்யும்படி கடந்த 10 ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நோட்டீஸ் ஒட்ட வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து நேற்று கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள 45 வீடுகளை இடிக்க மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், அதிரடி படையினரை குவித்து ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க முயன்றனர்.அவர்களை முற்றுகையிட்டு சும்மர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஜேசிபி முன் அமர்ந்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும், அதுவரை வீடுகளை இடிக்க விடமாட்டோம் என கதறிய மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்து போராடினர். இதனையும் மீறி அதிகாரிகள் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்து விட்டு,பொது மக்களின் வீடுகளை இடிக்க வந்த போது ஜேசிபி முன் நின்று போராட்டம் செய்ததால் இடிக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.