ஆரம்ப சுகாதார நிலையத்தில் தர சான்றுக்கான் ஆய்வு
மயிலாடுதுறை அரசு வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று (NQUAS) வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
. மயிலாடுதுறை தாலுகா காளி கிராமத்தில் அரசு வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தினசரி 200 புறநோயாளிகள் வரை வந்து செல்லும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச் சான்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூத்த தர ஆலோசகரும், தேசிய மதிப்பீட்டாளருமான ராஜசேகர் பாபு மற்றும் தர ஆலோசகர் லாவண்யாகுமார் ஆகிய இருவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மத்திய அரசின் நிதி மருத்துவ செலவினங்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டதா? மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுர்களின் செயல்பாடுகள், கட்டட பராமரிப்பு, குடிநீர், தூய்மை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள், லேப், அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றின் தரம் ஆகியன குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார், வட்டார மருத்துவ அலுவலர் ஏ.கிளின்டன் ஜூட், மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு வல்லுநர் மற்றும் தர மருத்துவ அலுவலர் இ.பிரவீன், வட்டார சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தேசிய தரச் சான்று வழங்கப்பட்டால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.