சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை
சந்தைகளில் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் அக்கறை காட்டுவது இல்லை என சமூக ஆர்வலர் ரகுபதி தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட மாயனூர் லாலாபேட்டை கொசூர், இரும்பூதிபட்டி கால்நடை மற்றும் சில்லறை சந்தைகளில் வரி வசூல் செய்யும் உரிமை பெறுவதற்கான ஏலம் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து மாயனூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரகுபதி கூறும் போது, ஒவ்வொரு வருடமும், கடந்த வருடத்தை காட்டிலும் ஐந்து சதவீதம் கூடுதல் தொகை வைத்து ஏலம் நடத்துகின்றனர் அதிகாரிகள். சந்தைகளை நடத்தும் போது, அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மின் விளக்கு, குடிநீர், கழிப்பிடம், சுகாதார வளாகம் போன்றவற்றிற்கான பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் அக்கறை கொள்வதில்லை. ஏலம் நடத்துவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர்.
இன்றைக்கு நவீன உலகத்தில் வாழ்ந்து வரும் நமக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. வசூலிக்கப்பட்ட ஏலத் தொகையில் குறிப்பிட்ட ஊராட்சிகளுக்கு 30 சதவீதம் வரை வழங்க வேண்டும் அதையும் வழங்க மறுக்கின்றனர். இப்படியே சென்றால், எதிர்காலத்தில் ஏலம் மட்டுமே நடக்கும். சந்தை நடக்காது என்றார்.