மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அலுவலர்கள் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் உள்ள விசைப்படகுகளை, மீனவா் நலம் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

Update: 2024-06-01 08:28 GMT

அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாள்களுக்கு, பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம்.

இந்த தடை காலத்தில் அனைத்து விசைப்படகுகளும், கடலில் இருந்து கரைக்கு ஏற்றப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெறும். மீன்வளத்துறை உதவி இயக்குநா் தலைமையிலான அலுவலர் குழுவினா் படகுகள் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வுசெய்து சான்றிதழ் வழங்குவா்.

இந்நிலையில், மல்லிப்பட்டினத்தில் உள்ள 37, கள்ளிவயல் தோட்டத்தில் உள்ள 50 விசைப் படகுகளையும் மீன்வளத் துறையினா் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் கங்கேஸ்வரி, நடராஜன், பிலிப் ஆகியோர் ஆய்வு செய்து படகுகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கினர்.

இந்த ஆய்வில் மீன்வள மேற்பார்வையாளர்கள் விஜயபாலன், விக்னேஷ்வரன், சார்லஸ், மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன் மற்றும் ராஜா, தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன், மீன்பிடி சங்க தலைவர் ஹபீப் முகமது, செயலாளர் இப்ராகீம் மற்றும் நீலகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News