சேலம் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
52 கடை விற்பனையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
Update: 2024-06-03 10:56 GMT
சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் சேலம் அம்மாப்பேட்டை, எருமாபாளையம், அழகாபுரம், குகை, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட மாநகர பகுதிகளில் செயல்படும் 60-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, 52 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் நடந்த சோதனையில் 52 கடைகளில் சிறு, சிறு குறைபாடு கண்டறியப்பட்டது. அந்த கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தவறு செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றனர்.