பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க வசிப்பிடத்திற்கே சென்ற அதிகாரிகள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இந்து ஆதியன் பழங்குடியினர் இன மக்களை தேடி சென்று வருவாய் அதிகாரிகள் சாதி சான்றிதழுக்கான விண்ணப்பபடிவங்களை பெற்றுகொண்டனர்.

Update: 2024-02-19 01:22 GMT

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க வசிப்பிடத்திற்கே சென்ற அதிகாரிகள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த அரசூர் ஜேஜே நகரில் சுமார் நூறு குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இந்து ஆதியன் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களை தங்களது இரு சக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு பல்வேறு கிராமங்களில் விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆதியன் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள் இடர்பாடு காரணமாக இவர்களின் குழந்தைகள் கல்வி பயின்று உயர்நிலைக்கு செல்ல முடியாத தடைகளும் நிலவி வருகிறது.

இவர்கள் பெருமளவு படிப்பறிவு இல்லாத காரணத்தினால் ஜாதி சான்றிதழை முறையாக யாரை அணுகி பெற வேண்டும் என்றும் தெரியாமல், மேலும் அதில் உள்ள சில சிக்கல்கள் காரணமாக ஜாதி சான்றிதழை பெற்று அவர்களின் குழந்தைகளை உயர்கல்வி பயில அனுப்ப முடியாத சூழலில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனைகளை அறிந்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் ஆகிய இருவரும் இன்று அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலரை உடன் அழைத்துக்கொண்டு நேரில் சென்று, அங்குள்ள 87 மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று கொண்டு அவர்கள் அனைவருக்கும் ஒருவார காலத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

மேலும் அவர்களின் அடிப்படை தேவைகள் என்ன என்ன என்பதை கேட்டறிந்து. அவற்றையும் நிறைவேற்றி தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள காலக்கட்டத்தில் அரசு சான்றிதழ் பெற விண்ணப்பித்தாலும் ஏதேனும் ஒரு காரணத்தால் கூறி நிராகரிக்கும் சில அதிகாரிகள் மத்தியில், தங்கள் பகுதிக்கே வந்து தங்களின் தேவையை அறிந்து நிறைவேற்றி தருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News