ஆம்னி பஸ் கட்டணம் இருமடங்கு உயர்வு : சேலம்- சென்னைக்கு ரூ.1,300 வசூல்

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால் அதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பொருட்படுத்தாமல் சென்னைக்கு இருமடங்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலித்ததை காணமுடிந்தது. இது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-30 01:02 GMT

பயணிகள் கூட்டம் 

சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் மக்கள் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்னை, கோவை, மதுரை, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் வசித்து வருகிறார்கள். அவர்கள் பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊரான சேலம் மாவட்டத்துக்கு வந்து செல்வார்கள். இந்தநிலையில் தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் வெளியூர்களில் வசிக்கும் சேலம் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

விடுமுறை முடிந்து விட்டதால் நேற்று மீண்டும் தாங்கள் தங்கியிருந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு இவர்களில் பலரும் ரெயில்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து சென்றனர். இதனால் சென்னை செல்லும் சேலம்- சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. ஆம்னி பஸ்களை பொறுத்த வரையில் சேலத்தில் இருந்து சென்னை செல்ல அதிகபட்சமாக ரூ.1,300 வரை கட்டணம் வசூல் செய்யப்பட்டது. அதேசமயம், சாதாரண சில ஆம்னி பஸ்களில் சேலத்தில் இருந்து கோயம்மேடு, கிளாம்பாக்கம் பகுதிக்கு செல்ல ரூ.1,000 வசூல் செய்தனர். குடும்பமாக சென்றவர்கள் டிக்கெட்டுக்கு மட்டும் பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியது இருந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் சென்னைக்கு ரூ.300-ம், விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் (எஸ்.இ.டி.சி.) பஸ்களில் ரூ.420 வரைக்கும் சென்னைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் சாதாரண பஸ்களில் உட்கார கூட இடம் கிடைக்காத நிலையில் ஆம்னி பஸ்களில் சொகுசாக சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் பலரும் கட்டணத்தை பொருட்படுத்தாமல் ஆம்னி பஸ்களில் சென்றனர். மேலும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் சாதாரண பஸ்களில் சென்றனர். இதற்காக நேற்று மாலை ஏராளமாேனார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சென்னை, கோவை, ஓசூர் உள்ளிட்ட பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறியதை பார்க்க முடிந்தது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால் அதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பொருட்படுத்தாமல் நேற்று சென்னைக்கு இருமடங்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலித்ததை காணமுடிந்தது. இது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News