எண்ணெய் கிணறு கசிவை சரி செய்த ஓஎன்ஜிசி

அடியாமங்கலம் ஓஎன்ஜிசி எரிவாயு கிணற்றில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பராமரிப்புப் பணியை ஒரே நாளில் நிறைவு செய்தனர்.

Update: 2024-06-30 02:45 GMT

பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்

மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசியின் 2 எண்ணெய் எரிவாயு கிணறுகளில் 2015-ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டதால், அங்கு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த கிணறுகளில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிட்டது. திடீரென்று முள்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த அந்த பகுதியை ஓஎன்ஜிசி அண்மையில் சுத்தம் செய்தபோது எரிவாயு குழாயில் லேசான சத்தத்துடன் எரிவாயு வெளியேறியதால் எரிவாயு கசிவை சரிசெய்ய 2 நாள் பராமரிப்புப் பணிக்கு அனுமதி கோரி ஓஎன்ஜிசி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தது.

ஆனால் ஓஎன்ஜிசி அங்கு மீண்டும் துரப்பன பணியை தொடரும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி இப்பணிக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, எரிவாயு கசிவை சரி செய்து நான்கு மாதங்களில் அந்த இடத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டதாக ஓஎன்ஜிசி நிர்வாகம் தெரிவித்தது.

அதன்படி வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, டிஎஸ்பி திருப்பதி ஆகியோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட எரிவாயு கிணற்றை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டு, பணிகளை செய்ய ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து, ஓஎன்ஜிசி அதிகாரிகள் முன்னிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பராமரிப்புப் பணிகளை தொடங்கிய பொறியாளர்கள் நேற்று ஒரே நாளில் பணிகளை நிறைவு செய்தனர்.

Tags:    

Similar News