ஆன்லைன் மோசடி

ஊட்டியில் ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சம் பணத்தை இழந்த வாலிபர், போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-13 14:48 GMT

ஊட்டியில் ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சம் பணத்தை இழந்த வாலிபர், போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி., பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் முகநூல் மூலம் லிங்க் ஒன்று வந்தது. அதில் அரிஹந்த் கேபிட்டல் என்ற பெயரில் பங்கு சந்தை நிறுவனம் என கூறி செயலி மூலம் நிதி முதலீடு செய்யுமாறு குறிப்பிட்டிருந்தது. அவ்வாறு செய்யப்படும் முதலீட்டுக்கு ஊக்கத்தொகை பெரிய அளவில் கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய வாலிபர் ஆன்லைன் முறையில் பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்து 3 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு எந்தவிதமான ஊக்கத் தொகையும் கிடைக்கவில்லை . அதே நேரத்தில் நிறுவனத்தை பற்றி விசாரித்த போது போலி நிறுவனம் என்பது தெரிய வந்ததையடுத்து, முதலீடு செய்த பணத்தையாவது மீட்க முயற்சி செய்தார்.

ஆனால் அந்த பணத்தையும் மீட்க முடியவில்லை. எனவே தான் ஏமாற்றப்பட்டது அறிந்த வாலிபர் இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பணம் முதலீடு செய்வதற்கு முன்னர் நிறுவனம் பற்றி சரியான புரிதல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதலீடு பாதுகாப்பான இடத்திற்கு செல்கிறதா என்பதை உறுதி செய்த பின்னர்தான் ஆன்லைன் முறையில் பணம் அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட வாலிபர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றனர்.

Tags:    

Similar News