கொள்ளையடித்த நகையில் 'ஆன்லைன்' முதலீடு, உல்லாசம் வாலிபர் வாக்குமூலம்
கொள்ளையடித்த நகையில் 'ஆன்லைன்' முதலீடு, உல்லாசம் வாலிபர் வாக்குமூலம்
Update: 2024-06-25 04:46 GMT
மதுரவாயல் அருகே, ஆலப்பாக்கம் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி, உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 42 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொள்ளை குறித்து, மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் விசாரணையில் ஈடுபட்டனர். கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளையில் ஈடுபட்டது, பூந்தமல்லி அருகே, சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ், 21, என்பது தெரிய வந்தது. அவர், போலீசாருக்கு சவால் விடும் வகையில், பகல் நேரங்களில் நோட்டமிட்டு, பூட்டி கிடக்கும் வீடுகளில் நகைகளை திருடும் 'கில்லாடி' என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ராஜேஷை நேற்று பிடித்து விசாரித்தனர். அப்போது, 'என் மீது, பகல் நேரங்களில் நகைகளை கொள்ளையடிப்பது தொடர்பாக, 36 வழக்குகள் உள்ளன. நகைகளை கொள்ளையடித்து நண்பர்களுக்கு உதவி செய்வேன். நகைகளை அடகு வைத்து, அந்த பணத்தில் துணை நடிகையரிடம் உல்லாசம் அனுபவிப்பேன். ஆன்லைன் முதலீடுகளிலும் ஈடுபட்டு வருகிறேன்' என, வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 31 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.