திருப்பூர் மாநகராட்சியுடன் 19 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
திருப்பூர் மாநகராட்சியுடன் 19 ஊராட்சிகள் இணைக்க பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியுடன் 19 ஊராட்சிகளை இணைக்க பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு 13 ஆண்டுகளாக இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி தடுமாற்றம் புதிய ஊராட்சிகளை இணைக்கவும் வலுக்கும் எதிர்ப்பு ! திருப்பூர் மாநகராட்சியுடன் 19 ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு,
ஆரம்ப கட்டத்திலேயே பல்வேறு ஊராட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தலா 15 வார்டுகள் உள்ளன.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8 லட்சத்து 77 ஆயிரத்து 778 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை வசிக்கும் மாநகராட்சியாக உள்ளது. மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ஒருபகுதியாக 19 ஊராட்சிகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைக்க திட்டமிட்டு அதற்கான உத்தேச பட்டியலை, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், திருப்பூர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் பெருமாநல்லூர், பழங்கரை, பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கணபதிபாளையம், கரைப்புதூர், அருள்புரம், ஆறுமுத்தாம்பாளையம், 63.வேலம்பாளையம், இடுவாய், மங்கலம், கணியாம்பூண்டி மற்றும் வஞ்சிப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வீரபாண்டியை சேர்ந்த ஈ.பூங்கொடி கூறும்போது, “மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட எங்கள் பகுதியில் சாலை வசதிகள் கிடைத்துள்ளன. சாக்கடை கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்கள் கிடைக்கவில்லை. கல்லாங்காடு, திருக்குமரன் நகர் ஆகிய பகுதிகள் மாநகரில் இருந்தாலும், இன்னும் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. ஒரு சதுர அடிக்கு ஊராட்சி அளவில் ரூ. 1.50 வரி விதிக்கப்படுகிறது.
மாநகராட்சியாக மாறும்போது, ரூ. 6.84 பைசாவாக மாறுகிறது. குடிநீர், குப்பை உள்ளிட்ட அனைத்து வரிகளும் பல மடங்கு அதிகரிக்கும். சில இடங்களில் குடிநீர், சாலை வசதி கிடைக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த வளர்ச்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் இருக்க வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வரி உயர்வு மூலம், அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் மக்கள் வாழ்க்கைத்தரம் மாறுமா என்பது சந்தேகம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முத்தனம்பாளையத்தை சேர்ந்த டி.ஜெயபால் கூறும்போது, ”முத்தனம்பாளையம் ஊராட்சியின் பிரதான பகுதிகளிலேயே கழிவுநீர், வடிகால் வசதிகள் இல்லை. மாநகராட்சியுடன் இணைத்தால் அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்று சொல்லித்தான் 13 ஆண்டுகளுக்கு முன்பு இணைத்தனர். பிஏபி நகர், கார்த்திக்நகர், குருவாயூரப்பன்நகர், பிள்ளையார் நகர் என பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. முத்தனம்பாளையத்தில் மாநகராட்சியின் 58,59 மற்றும் 60 வார்டுகளும், வீரபாண்டியில் 53, 54 மற்றும் 57 ஆகிய வார்டுகளில் இன்னும் பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை.
மாநகரின் மையப்பகுதியாக உள்ள 44-வது வார்டில் செல்லப்புரம் வீதிகள், குப்புசாமிபுரம், காளியம்மன்கோயில் வீதி, ராஜவீதி, டிமாண்ட்வீதி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடைகள் இல்லை. மாநகரின் மையப்பகுதியிலே இப்படிப்பட்ட நிலை இருக்கும்போது, இனி புதியதாக இணைக்கப்படும் ஊராட்சிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட எந்தளவுக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஊராட்சியாக இருக்கும் வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பசுமை வீடு திட்டம் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள். மாநகராட்சியாக மாறும்போது, மக்களுக்கான திட்டங்கள் பெரியதாக கிடைக்கவாய்ப்பு இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில ஊராட்சி தலைவர்கள் கூறும்போது, “19 ஊராட்சிகள் சார்பில் கூட்டமைப்பை உருவாக்கி, ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறும்போது,
“மாநகராட்சிகளை விரிவுபடுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக 19 ஊராட்சிகளை உத்தேசித்துள்ளோம். இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளிடம் விரைவில் கருத்து கேட்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.