கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
மணப்பாறை அருகே கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் கூட்டம் நடத்தி எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
மணப்பாறை நகராட்சி, நகராட்சி எல்லையில் உள்ள கிராமங்களை இணைத்து நகராட்சியை விரிவாக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வடுகப்பட்டி, மேலமஞ்சம்பட்டி, இடையப்பட்டியான்பட்டி, கண்ணுடையான்பட்டி, சீகம்பட்டி, ஆணையூா், நல்லாம்பிள்ளை, உடையாப்பட்டி, உசிலம்பட்டி, மில் பழைய காலனி, புதிய காலனி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சித் தலைவா்களுக்கு இதுகுறித்து கருத்து கேட்பு கடிதங்கள் அனுப்பட்டுள்ளதாம்.
தோ்தல் பணிகள் நடைபெறும் நிலையில் அதற்கான தொடா் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. இந்நிலையில் இது தொடா்பாக கிராம பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு மேலமஞ்சம்பட்டி, இடையப்பட்டியான்பட்டி ஆகிய கிராமங்களை சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊா் முக்கியஸ்தா்கள் தலைமையில் மேலமஞ்சம்பட்டி திடலில் கூடி நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கூட்டம் நடத்தினா். அப்போது கிராமங்கள் ஊராட்சி நிா்வாகத்திலேயே இருக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனா்.