ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - எஸ்பி பேச்சுவார்த்தை.

Update: 2023-11-21 03:26 GMT
எஸ்பி பேச்சுவார்த்தை.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் வி.மருதூர் ஏரி பகுதியையும் மற்றும் ஏரிக்கரை பகுதி யையும் 390 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் என கட் டிடங்களை கட்டியுள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த ஆக்கிரமிப்புகளால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்கு நாள் சுருங்கி வருவதோடு ஏரிக்கு நீர்வரத்து வருவதும் தடைபட்டது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதையடுத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு பல முறை நோட்டீசு அனுப்பியும், காலஅவகாசம் வழங்கியபோதிலும் அவர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாததால் படிப்படியாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ்காந்தி நகர், சின்னப்பா நகர், மணி நகர் உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சில வீடுகளை அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இப்பிரச்சினை தொடர்பாக விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே மீண்டும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் கே.கே. சாலைக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் அங்கு நேரில் சென்று ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவின்பேரிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 6 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும் நீங்கள் மாற்று ஏற்பாடு செய்யவில்லை. உங்களுக்கு அருகே மாற்று இடத்தில் அரசு பட்டா வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். தொடர்ந்து, அவகாசம் வழங்க நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று சமாதானப்படுத்தினார். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News