ஓ.பி.எஸ். அணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஓ.பி.எஸ். அணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்
Update: 2024-03-29 05:25 GMT
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஓ.பி.எஸ். அணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் தர்மபுரி ரோட்டரி அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் நேதாஜி. நகர கழக செயலாளர் ஆர் எம் பூக்கடை சக்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஆகிய என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். தர்மபுரி தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நான் அறிவேன். தர்மபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் இல்லாமல் 3 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி பெங்களூர், சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். அவர்களை மீண்டும் தர்மபுரி மாவட்டத்திற்கு அழைத்து வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். அதற்கு சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயம் செழிக்கும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மொரப்பூர்-தர்மபுரி ரெயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தர்மபுரி மாவட்டம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக உருவாகும். மாவட்டத்தில் மாணவிகளின் வசதிக்காக மகளிர் கல்லூரிகளை தொடங்க தேவையானநடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் இந்த மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும் இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.