சேலத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
சேலத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம் பெறபட்டதை அடுத்து அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, கூலித்தொழிலாளி. இவரது மகன் வினோத் (வயது 14). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளான். மாணவன் கடந்த 24-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுப்பதற்கு சென்றான். பின்னர் பணம் எடுத்துவிட்டு அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி வினோத் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் வினோத் மூளைச்சாவு அடைந்தான். இதையடுத்து அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.
பின்னர் மாணவனின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக எடுத்து செல்லப்பட்டன. தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குபவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் மணி மற்றும் டாக்டர்கள் மாணவனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.