நெல்லையப்பர் கோவிலில் பாரிவேட்டை நிகழ்ச்சி
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 10 ஆம் நாளான இன்று விஜயதசமியை ஒட்டி சுவாமி நெல்லையப்பர் சந்திரசேகரராக வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நெல்லை ராமையன்பட்டி பகுதியில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரிவேட்டைக்கு சென்ற சுவாமி நெல்லையப்பருடன் நெல்லை நகர் எல்லை வரை நெல்லையின் காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் செல்ல ராமையன்பட்டி எல்லையில் வன்னி மரத்திற்கு அம்பு விட்டு பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதிபாரதனை நடந்தது தொடர்ந்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்வதற்கு அருள் புரியும் விதமாக நெல்லையப்பர் பிட்டாபுரத்தி அம்மனுக்கு காட்சி கொடுக்க அம்பாள் மூன்று முறை சுவாமியை வளம் வந்து அருள் பெற்றார். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.