பாலமேடுபுதூர் மின்வட கம்பியால் மக்கள் அச்சம்
பாலமேடுபுதூர் பகுதியில் மின்கம்பத்தில் இருந்து தரையில் பாயும் உயர்அழுத்த மின்வட கம்பியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மல்லசமுத்திரம் அருகே, பாலமேடுபுதூர் பகுதியில், கோட்டப்பாளையம் ஏரி அருகில், அம்மன்கோவில் பின்புறத்தில் பாப்பாத்தி;56 என்பவரது விவசாய நிலத்தில் உள்ள 5வது மின்கம்பத்தில் கடந்த சில வருடங்களாக உயர்மின்அழுத்த மின்வட கம்பிகள் தரையில் புதைந்தவாறு இழுத்து கட்டியுள்ளனர்.
குறிப்பாக, இதன் அருகில் ஏரி இருப்பதால் மழைக்காலங்களில் ஏரிஉபரிநீர் இந்த மின்கம்பிகளில் மோதி மின்சாரம் பாயும் வாய்ப்புள்ளது. இங்கு ஆடு, மாடு மேய்ச்சலுக்காக வருபவர்கள் மற்றும் சுற்றியுள்ள வயல்வெளி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த மின்சார கம்பிகளின் மூலமாக மின்சாரம் பாய்ந்து ஆடு, மாடுகளுக்கும்,
மனிதர்களுக்கும் உயிர் போகும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அருகில் செல்லகூட அச்சப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தால் தான் இவ்வாறு உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வுசெய்து பூமிக்கடியில் செல்லும் உயர்மின்அழுத்த மும்முனை மின்வட கம்பியை அகற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.