பாம்பன் சுவாமிகளின் 95 ஆம் ஆண்டு குருபூஜை விழா
பிரப்பன் வலசை பகுதியில் பாம்பன் சுவாமிகளின் 95 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
ராமநாதபுரம் பழந்தமிழ்க்குடியான பேரினத்தில் உதித்து தமிழ் கடவுள் முருகனை தவமிருந்து தரிசித்த அகத்தமிழன் ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகளின் 95 வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் என்ற ஊரில் பழந்தமிழ்க்குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை மற்றும் செங்கமலம் என்பாருக்கு மகனாக தோன்றினார். இவர் வடமொழி,தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும் சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666 இவை 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது பாம்பன் சுவாமிகள் மே 30 1929 அன்று ஜீவசமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது. பாம்பன் சுவாமிகள் தமது 46 ஆவது வயதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரப்பன் வலசை என்னும் ஊரினைத் தவம் புரியத் தேர்வு செய்து, உரிய அரசு அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று அவ்வூரில் உள்ள மயான பூமியில் ஒரு குழி அமைக்கச் செய்தார்.
“குமரவேளைத் தரிசித்தால் அன்றி இனி மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என்று சூளுரைத்துத் தவத்தைத் தொடங்கினார். ஆறு நாட்கள் பழநிக் கடவுளை உள்ளத்தில் நிறுத்திக் கடும் தவம் புரிந்தார். ஏழாம் நாளில் தண்டாயுதபாணியின் தரிசனத்தையும், ஓரெழுத்து உபதேசத்தையும் பெற்றார். பழநிக்கடவுளுடன் அகத்தியரையும், அருணகிரியாரையும் கண்டு தரிசித்தார். பின்னரும் சுவாமிகள் 28 நாட்கள் பதி நிட்டையில் இருந்தார்.
ஒரு அசரீரியின் ஆணையினால் தவத்தில் இருந்து மீண்டார். தம் மனமடங்கி இறைக்காட்சி தோன்றிய இடமான பிரப்பன் வலசைத் தலத்தை மகிழ்ந்துப் பாடியுள்ளார்.1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது குதிரை வண்டிச்சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73 ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார். அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் இரண்டு மயில்கள் ஆடிவருவதை அங்கு உள்ளவர்கள் கண்டனர் பின்னர் ஓர் இரவு செவ்விய குழந்தை ஒன்று பாம்பன் சுவாமிகள் அருகில் படுத்திருக்க கண்டனர் பின்னர் அனைவரும் வியப்படையும் வண்ணம் கால் எலும்பு சேர்ந்தது அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மே 30 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் ஜீவசமாதி அடைந்தார்கள் மேலும் பாம்பன் சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 1929 திருவான்மியூரில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது. இன்று வரை இராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவான்மியூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கண்கண்ட கடவுளாக பாம்பன் சுவாமிகளே விளங்கி வருகிறார். அவரின் 95 ஆம் ஆண்டு குருபூஜை விழா பிரப்பன் வலசை பகுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான ஆன்மீக பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்- ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கினர்