மலையாண்டி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா

வலையபட்டி மலையாண்டி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-25 07:04 GMT

பங்குனி உத்திர விழா

பொன்னமராவதி அருகேயுள்ள வலையபட்டி மலையாண்டி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அக்னி பால்குட விழா நடைபெற்றது. வலையபட்டி மலையாண்டி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதையடுத்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பங்குனி உத்திர விழாவின் தொடக்கமாக, பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக மலையாண்டி கோயிலுக்கு வந்தனர். அங்கு கோயிலின் முன் வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் பால்குடம் மற்றும் காவடியுடன் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பொன். வையாபுரிப்பட்டி ஊரார்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து திங்கள்கிழமை மலையாண்டி சுவாமி மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News