பரந்தூர் விமான நிலையம்: சட்டப் போராட்டம் நடத்த மக்கள் தீர்மானம்!
பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட போராட்டம் நடத்த மக்கள் தீர்மானித்துள்ளனர்.
Update: 2024-03-19 14:41 GMT
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் நாகப்பட்டினம் 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நாள் தோறும் இரவு நேரங்களில் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் , பேரணி , சாலைமறியல் என பல்வேறு நிகழ்வுகளில் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சிறப்பு தனி நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இதற்கான அறிவிப்பு ஒவ்வொரு கிராமமாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 600 வது நாள் நிகழ்வில் ஏகனாபுரம் பகுதியில் உள்ள அம்மன் திருக்கோயிலில் இருந்து ஊர்வலமாக கிராம மக்கள் தங்களது விலை நிலப் பகுதிகளுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதனால் இப்பகுதியில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையும் நிறுத்தப்பட்டது.கிராம வீதிகளில் ஊர்வலமாக சென்று தியாகராபுரம் ஏரி கரைப்பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.