நாகர்கோவில் பஸ் நிலையத்தில் 6 வயது குழந்தையை தவறவிட்ட பெற்றோர்
சிறுவனை ஒப்படைத்த பெண் எஸ் ஐ-க்கு பாராட்டு.
Update: 2024-03-26 17:24 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வம், தீபா தம்பதியினர் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் கொண்ட குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றனர். அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தங்களது 3வது குழந்தையான 6 வயது மகன் ஜோகித்தை தவறவிட்டனர். சிறுவன் தனியாக தவிப்பதை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் பெண் காவல் உதவி ஆய்வாளர் மேரி விரைந்து வந்து சிறுவனை மீட்டு புறக்காவல் நிலையத்தில் வைத்திருந்தார். அழுது கொண்டிருந்த சிறுவனுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து அன்பாக பேசி பெற்றோர் குறித்த தகவலை விசாரித்தார். அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து உடனடியாக சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் அவர்களை வரவழைத்து சிறுவனை ஒப்படைத்தனர். தவறவிடப்பட்ட சிறுவனிடம் தாயை போல் பேசி ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.