களியக்காவிளை பஸ் நிலையத்தில் பைக்குகளால் பயணிகள் அவதி
களியக்காவிளை பஸ் நிலையத்தில் பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைப் பகுதியில் களியக்காவிளை பஸ் நிலையம் உள்ளது. கடந்த ஆட்சியில் களியக்காளை பஸ் நிலைய விரிவாக்க பணிக்கு 3 கோடி 15 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் வணிகர்களின் எதிர்ப்பால் பணிகள் முடங்கின. இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன் பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக காத்திருந்த தொகை அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வசதியாக ஏற்கனவே இருந்த கட்டங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும் மழைக்காலங்களில் ஒதுங்கி நிற்க இடம் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இதனால் தற்காலிக பயணியர் நிழற்குடை அமைத்தனர். ஆனால் சிலர் தினமும் இரு சக்கர வாகனங்களை இந்த நிழற்குடையில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் வெயிலில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.