பகல் நேர ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை !
தூத்துக்குடி - சென்னை இடையே "பகல் நேர ரயில்" இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-07-16 06:54 GMT
தூத்துக்குடி - சென்னை இடையே "பகல் நேர ரயில்" இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பியிடம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா. பிரமநாயகம், நிர்வாக செயலாளர் ஜெ. அந்தோணி நேவிஸ் ஆனந்தன், துணைத் தலைவர் எஸ். அந்தோணி முத்துராஜா, உறுப்பினர் எம். நாராயணன் ஆகியோர் மனு அளித்தனர். அந்த மனுவில், "தூத்துக்குடி மாநகரத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் தூத்துக்குடி - கோவை இரவு நேர லிங்க் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடி -சென்னை பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்குப் பின் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டு விட்டது. தாங்கள் சென்ற முறை பாராளுமன்றத்தில், திருநெல்வேலி - பாலக்காடு 'பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து மதுரை-திருச்சி-தஞ்சை- கும்பகோணம் வழியாக சென்னைக்கு கூடுதல் இரவு நேர ரயில் இயக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து இரவு நேர ரயில் கோயம்புத்தூருக்கு தினசரி இயக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் இருமுறை பேசி உள்ளீர்கள். ரயில்வே அமைச்சரை, பலமுறை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளீர்கள். மேற்படி கோரிக்கைகள் அனைத்தையும் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்தும் தூத்துக்குடி மாநகர மக்களுக்காக முயற்சி செய்து உள்ளீர்கள். அதன் பலனாக, தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் மூன்று முறை இரவு நேர ரயில், திருநெல்வேலி-பாலக்காடு "பாலருவி விரைவு ரயில்" தூத்துக்குடி வரை நீடிப்பு போன்ற கோரிக்கைகளுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், ரயில்வே நிர்வாகம் இந்த ரயில்களின் இயக்கம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. கோரிக்கைகள் : 1) தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரம் மூன்று முறை ரயில் மற்றும் திருநெல்வேலி - பாலக்காடு "பாலருவி ரயிலை" தூத்துக்குடி வரை நீட்டிப்பு ஆகியவை குறித்து டெல்லி ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை விடுத்து உடனடியாக இயக்க வலியுறுத்த வேண்டுகிறோம். 2) தூத்துக்குடி - சென்னை முத்து நகர் ரயில் கோச்சுகளை வைத்து, தூத்துக்குடி - மதுரை - திருச்சி - தஞ்சாவூர் - கும்பகோணம் - மயிலாடுதுறை கடலூர்-விழுப்புரம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில் இருக்க வேண்டும். 3) தூத்துக்குடி - சென்னை "பகல் நேர ரயில்" இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4) தூத்துக்குடி - மீளவிட்டான் - மேலமருதூர் - குளத்தூர் -விளாத்திகுளம் - நாகலாபுரம் புதூர் - அருப்புக்கோட்டை - காரியாபட்டி - ஆவியூர் - திருப்பரங்குன்றம் - மதுரை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு வருகின்ற மத்திய பட்ஜெட்டில் 500 முதல் 1000கோடி வரை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும் ரயில்வேத் துறையையும் வலியுறுத்த வேண்டுகிறோம். 5) திருச்சி- காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். 6) தூத்துக்குடி - சென்னை முத்து நகர் ரயிலை காலை 7:00 மணிக்குள் சென்னை எழும்பூர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். 7) மதுரை- லோக்மான்ய திலக் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும் இது குறித்து டெல்லி ரயில்வே வாரியத்திடம் உடனடியாக பேசி, நல்ல முடிவுகளை தூத்துக்குடி மாநகர பொது மக்களுக்கு பெற்றுத் தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.