வனவிலங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சம் !
பத்துகாணி அருகே வனவிலங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் வெளியேற அச்சம் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில், வனப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை அரசு ரப்பர் கழகத்தின் ரப்பர் தோட்டங்களாக மாற்றி 60 ஆண்டுகள் ஆகிறது. குறிப்பிடும் அளவிற்கு ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத் திற்கு பெரிதும் துணையாக இருந்த அரசு ரப்பர் கழகத்தில் தோட்டவேலை, கடந்த சில வருடங்களாக உயிருக்கு பாதுகாப்பற்றதாக மாறி உள்ளது. வனத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமின்றி பல வருடங்களுக்கு முன் குடியிருப்பு பகுதி களாக மாறிய பகுதிகளில் கூட காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வரும் நிலை, மலையோர பகுதி மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அச்சத்தை அதிகரிக்க செய்கிறது.
இந்நிலையில்,இன்று அதிகாலை நேரத்தில் பத்துகாணி அருகே பஸ் ஏற பயணிகள் வரும் போது காட்டு பன்றிகள் கூட்டமாக ரோட்டின் குறுக்கே சென்றதை கண்டு உள்ளனர். இரவு நேரத்தில் காட்டு பன்றிகள் மற்றும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் மலையோர பகுதிகளில் இரவு நேர பயணம் ஆபத்தான நிலைக்கு மாறி உள்ளது.குறிப்பாக இருசக்கர வாகனங்களில் கவன முடன் பயணிப்பதும், கூடிய அளவில் இரவு நேர பயணத்தை தவிர்ப் பதும் பாதுகாப்பானது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.குடியிருப்புகளுக்குள் காட்டு விலங்குகள் புகாமல் தடுக்க வனதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.