மேனலுார் தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட மக்கள் கோரிக்கை

மேனலுார் சாலை தரைப்பாலத்தை உயர்த்திக் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை.

Update: 2024-05-15 14:58 GMT

தரைப்பாலம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேனலுார் கிராமம். உத்திரமேரூர் ஏரி, மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால், விக்கிரமநல்லுார் அருகே உள்ள ஏரிக்கரையின் நரிமடை திறந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது வழக்கம். வெள்ள அபாய காலகட்டத்தில் இந்த நரிமடை என்கிற கலங்கல் பகுதி திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்து வெளியேற்றப்படுகின்ற தண்ணீர், மேனலுார் நீர்வரத்து கால்வாய் வழியாக கம்மாளம்பூண்டி உள்ளிட்ட பகுதி ஏரிகளுக்குச் சென்று இறுதியாக மதுராந்தகம் ஏரியை அடைகிறது. உபரிநீர் வெளியேறும் இந்த நீர்வரத்து கால்வாயின் இணைப்பாக மேனலுாரில் தரைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் தாழ்வானதாக உள்ளதால், மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து தரைப்பாலம் மூழ்கி தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்வது பல ஆண்டுகளாக தொடர்கிறது. அச்சமயம் மேனலுார் கிராமத்தினர், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இயலாமல் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுகிறது. எனவே, உத்திரமேரூர் ஏரி நீர்வரத்து கால்வாய் இணைப்பான மேனலுார் சாலை தரைப்பாலத்தை உயர்த்திக் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News