திருப்பூர், கோவை மாவட்டங்களில் சர்பாசி சட்டத்தால் பாதிப்பு

திருப்பூர் கோவை மாவட்டங்களில் சர்பாசி சட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Update: 2024-05-30 14:01 GMT

பொதுமக்கள் 

  திருப்பூர் நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.திருஞானசம்பந்தன் தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட பல்லடம், சூலூர், சோமனூர், மங்கலம், அவிநாசி, அன்னூர் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களையும், சிறு, குறு தொழிலில் நலிவடைந்தவர்களின் விவசாய பூமிகளையும், சொத்துக்களையும் திருப்பூர், கோவை மாவட்டங்களில்  எங்கும் இல்லாத அளவில், சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தி வங்கி மேலாளர்கள், ரொக்க ஏஜென்சிகள், ரியல் எஸ்டேட் கும்பல் கூட்டு சேர்ந்து அச்சுறுத்தி மிரட்டி சொத்துக்களை சட்டத்துக்கு புறம்பாக பெற்று வருகிறார்கள்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர் உரிய தவணை செலுத்தாதபோது, குறிப்பிட்ட காலத்துக்கு பின் வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ முதலில் நோட்டீஸ் வழங்கும். அதன் பின்னர் 60 நாட்களுக்கு கையகப்படுத்தும் அதிகாரத்தை மேற்கொள்ளும். அதன்பின்னரும் வாடிக்கையாளர் பணம் செலுத்தவில்லை என்றால், வங்கி அல்லது நிதிநிறுவனம் ஏலம் விடும் அதிகார்த்தை கொண்டிருப்பது தான்  சர்பாசி சட்டம் ஆகும். இந்த சட்டத்தால் இந்த இரு மாவட்டங்களில் பல விவசாய குடும்பங்கள், சிறு குறு தொழில்துறையினர் உயிரிழந்து வருகின்றனர். பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன. எனவே இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு அனைவரின் உயிரை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News