புழுதி புயலால் மக்கள் அவதி
மழையால் சகதி, வெயிலால் புழுதி புயல் என பொன்னமராவதி நகர மக்கள் அவஸ்தையடைகின்றனர்.
பொன்னமராவதி அண்ணாசாலை பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் ஒரு மாதமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக சாலையோரம் ஆங் காங்கே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்ட பின்னர் பள்ளம் மூடப்பட்டு வருகிறது. பள்ளத்தில் இருந்து தோண்டப்படும் மண் சாலை முழுவதும் பரவி கிடப்பதால் பகல் நேரத்தில் காற்று வீசும்போது புழுதி பறந்து வாகன ஓட்டுனர்களின் கண்களை பதம்பார்த்து வந்தது. இதைடுத்து பொன்னமராவதி வர்த்தக சங்கம் சார்பில் 2 நாட்களுக்கு முன்பு புதுவளவு அண்ணா சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மண் துகள்கள் பறக்காமல் இருப்பதற்காக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டது.
இதனால் புழுதி காற்றில் பறப்பது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மாலையில் பெய்த மழை காரணமாக அந்த சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நிலைதடுமாறி வழுக்கி விழும் சூழ்நிலை நிலவியது. சாலையில் நடந்து சென்றவர்களும் எச்சரிக்கையுடன் மெதுவாக சென் றனர். பருவமழைக்காலம் காரணமாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மாலை நேரத்தில் மழை பெய்வதால் மண் துகள்களை அப்புறப்படுத்தவும், குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.