வீட்டை இடித்த நபர்களை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
வீட்டை இடித்த நபர்களை கைது செய்யக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் ஊராட்சி காந்தி நகரில் குறவன் இனத்தைச் சேர்ந்த நபரின் வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்திய நபர்களை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் சபாபதி தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், மகாலிங்கம், கோவிந்தசாமி, தமிழ்நாடு குறவன் பழங்குடி முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம்,அண்ணாமலை,இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் பாவக்கல் ஊராட்சி காந்திநகரில் சங்கர் என்பவர் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வருகிறார்.கடந்த மாதம் அவரது வீட்டிற்க்கு பின் புறம் உள்ள உயர் சாதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் புதியதாக கடையை கட்டிக்கொண்டு, முன்பகுதியில் உள்ள குறவன் இனத்தை சேர்ந்தவர் வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது,
சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் இல்லையெனில் அடுத்த கட்டமாக பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என கூறினர்.