பேராவூரணி : குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கேட்டு மறியல் போராட்டம்
பேராவூரணி அருகே, குடியிருப்பு பகுதிக்கு, சாலை வசதி கேட்டு காலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், சொர்ணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பட்டத்தூரணி தெற்கு குடியிருப்பு பகுதிக்கான சாலையை, தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் வசித்து வரும் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சாலை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களோ, இரு சக்கர வாகனங்களோ கூட செல்ல முடியாத வகையில், சாலை ஆக்கிரமிப்பு காரணமாக குறுகலாக உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் மழைநேரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வருகிறோம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலரிடம் நேரிலும், பதிவு தபாலிலும் கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை அமைத்து தர வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் பட்டத்தூரணி ரயில்வே கேட் அருகே, பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் மாவட்டச் செயலாளர் அனல் ச.ரவீந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.பி.முருகானந்தம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் அ.சுப்பிரமணியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், 10 பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல் ஆய்வாளர் காவேரி சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் விஜயபாஸ்கர், வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர், கிராம உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஓரிரு நாளில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதன் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.