நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி - மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 283 நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து கட்டணம் இல்லாமல் வண்டல் மண்/ களிமண் எடுப்பது தொடர்பாக அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுவையில் :- தமிழ்நாடு அரசால் சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வதற்கும் வண்டல் மண் / களிமண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,
அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் எடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்; 01.07.2024 நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 283 நீர் நிலைகளில் வண்டல் / களிமண் எடுக்க விருதுநகர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4, நாள்:29.06.2024 மற்றும்; மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.5, நாள்:01.07.2024-ன்படி அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்தில் 49 நீர்நிலைகளும், சிவகாசி வட்டத்தில் 11 நீர்நிலைகளும், இராஜபாளையம் வட்டத்தில் 44 நீர்நிலைகளும், காரியாபட்டி வட்டத்தில் 16 நீர்நிலைகளும், திருச்சுழி வட்டத்தில் 47 நீர்நிலைகளும்;, விருதுநகர் வட்டத்தில் 13 நீர்நிலைகளும்;, சாத்தூர் வட்டத்தில் 28 நீர்நிலைகளும்;, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 46 நீர்நிலைகளும்;, அருப்புக்கோட்டை வட்டத்தில் 17 நீர்நிலைகளும்;, வெம்பக்கோட்டை வட்டத்தில் 12 நீர்நிலைகளும்; என மொத்தம் 283 நீர் நிலைகள் இனம் கண்டறியப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலான நீர்நிலைகளில் வண்டல் மண்ஃகளிமண் எடுக்க அனுமதி அளித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வண்டல் மண் / களிமண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தாம் வசிக்கும் வட்டத்தின் அருகாமையில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து எடுத்திட இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் வண்டல் மண் /களிமண் வெட்டி எடுத்து தமது வயல்களை வளம் பெறச் செய்வதோடு, மண்பாண்டத் தொழிலாளர்களும் தங்களது தொழிலை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக வண்டல்மண் /களிமண் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் தங்களது நில ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
இவ்விண்ணப்பங்கள் வருவாய்த் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணைய தரவுகளின் கீழ் நில ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியரால் வண்டல் மண்/களிமண் எடுக்க 30 நாட்களுக்கு மிகாமல் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும். விவசாய பயன்பாட்டிற்கென நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டேருக்கு 185 கன மீட்டர் அளவிலும், புஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது ஒரு ஹெக்டேருக்கு 222 கன மீட்டர் அளவிலும், மண்பாண்டம் தயாரித்திட 60 கன மீட்டர் அளவிலும் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமில்லாமல் வண்டல்மண்/களிமண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இவ்வாய்பினைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில் .தி.வெ.ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் நிலையில்.சீனிவாசன், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகிய அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்கள் அல்லது புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை துறையிலும், கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா அலைபேசி எண்.1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மண் எடுக்க அனுமதி பெற்று முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.