அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை: அதிக மகசூல் பெறலாம்
அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மையை கடைபிடித்தால் அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று அலுவலர் முகமது பாருக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பூச்சி மேலாண்மையில் தாவரங்களின் பங்கு அங்கக முறையில் பயிர் சாகுபடி செய்யும் அனைத்து வகையான பயிர்களிலும் பூச்சி தாக்கத்தினை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் தாவர பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
இவற்றை நம் முன்னோர்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். வேம்பு, நொச்சி, எருக்கு, ஆடா தொடா, அரளி, தும்பை, சோற்றுக் கற்றாழை, புங்கம், இலுப்பை போன்ற தாவரங்கள் சிறந்த பூச்சிக் கொல்லி தன்மையை பெற்றுள்ளன.
இவை எளிதில் கிடைப்பதாலும், விவசாயிகள் எளிதில் பயன்படுத்த முடிவதாலும் அங்கக பூச்சி கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து 100 லிட்டர் தண்ணீரில் முதல் 4 நாட்கள் வரை ஊர வைத்து வடிகட்டி தெளிக்கலாம். இவற்றை இலைப்பேன்,
அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், இலையை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இவை நன்மை செய்யும் சிலந்தி இனங்கள், தேனீக்கள், ஊன் உண்ணிகள் மற்றும் ஓட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.வேம்பு, புங்கம், இலுப்பை போன்ற தாவர எண்ணெய் பூச்சிகளை விரட்டவும் பூச்சிகளை அழிப்பதற்கும் அங்கக வேளாண்மையில் பயன்படுத்தப்படுகின்றன. 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து பயிர்களில் நன்கு படும் படி தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
பொதுவாக எண்ணெய்யை தண்ணீரில் ஊற்றும் போது அவை தண்ணீரில் கலக்காமல் அவற்றின் மேலே மிதக்கும் அவை நன்கு கலக்க சோப்பு திரவம் அல்லது காதி சோப்பு பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய், தண்ணீர் கலவையில் சோப்பு திரவத்தினை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அப்போது பால் போன்ற திரவம் தோன்றும் பால் போன்ற தன்மை மாறும் வரை சோப்பு திரவத்தினை சேர்த்து நன்கு கலக்கி கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய், தண்ணீர், சோப்புக் கலவை தெளிவான தன்மையை அடைத்தவுடன் பயிர்களின் மேல் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
எனவே, இந்த நடைமுறையை பின்பற்றி அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை முறைகளை சீராக கடைப்பிடிப்பதன் மூலம் பூச்சிகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்த்து அதிக மகசூல் பெற முடியும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.