ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையிழந்தவர் நிவாரணம் கேட்டு மனு
கொளத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி பார்வை இழந்த மாடுபிடி வீரருக்கு நிவாரணம் கேட்டு அவரது பெற்றோர் கலெக்டரிம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவில் மாடு முட்டி பார்வை இழந்த மாடுபிடி வீரருக்கு நிவாரணம் கேட்டு அவரது பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்..... பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் அருகேயுள்ள கொளத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் 26.ம் தேதி ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகளும் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை, அய்யன் வாய்க்கால் கரை, பகுதியைச் சேர்ந்த அங்கேஸ்வரன்வயது 23 என்ற மாடு பிடி வீரர் காளையை அடக்க முயற்சித்த போது மாடு முட்டியதில் முகத்தில் கண் பகுதியில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அங்கேஸ்வரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கண் அகற்றப்பட்டு விட்டது. மீண்டும் அவருக்கு கண் பார்வை கிடைக்காது என்றும், அறுவை சிகிச்சை மூலம் மாற்று கண் பொறுத்த முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறி தனது உறவினர்களுடன் பாதிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அங்கேஸ்வரனின் தாய் புளோரா தனது உறவினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தார். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.